புனித சின்னப்பரின் பெருமை -Life History of St.Paul in Tamil

அர்ச். சின்னப்பரின் பெருமை

வந். பிரான்சிஸ் திபூர்சியூஸ் ரோச். (தூத்துக்குடி முதல் ஆண்டகை)
(ஆயரின் குரலொலியிலிருந்து எடுக்கப்பட்டது.)

அன்பார்ந்த சகோதரர்களே! பிள்ளைகளே! இவ்வருடம் தபசுகால நிருபத்தின் நோக்கம், அப்போஸ்தலரான அர்ச். சின்னப்பர் மனந்திரும்பிய அற்புத சம்பவத்தை விளக்கிக் காண்பித்து, நாம் எல்லோரும் நம்மால் கூடியமட்டும் அவரைக் கண்டுபாவிக்க வேண்டும் என்பதே.

     அரர்ச்.சின்னப்பர். சிலீசியா மாகாணத்தின் பிரதானமான பட்டணமாகிய தார்ஸஸ் நகரில் பிறந்தவர். அவருடைய இயற்பெயர் சவுல். பெஞ்சமின் கோத்திரத்தைச் சேர்ந்தவர். உரோமை நகர்வாசிகளுடைய சுதந்திரங்களுக்கு உரித்தானவர். மனத்திட்பமும் வாக்கு வன்மையும், புத்தி தீட்ஷணியமும் வாய்ந்தவர். குள்ளமானவர். துலையில் உரோமம் இல்லாதவர். முரட்டுத் துணியில் கூடாரஞ் செய்வதில் பண்பட்டவர். இளமையில் ஜெருசலேம் நகர் சென்று அக்காலத்தில் பிரசித்திப் பெற்று விளங்கின கமாலியேல் என்னும் வேத சாஸ்திரியிடம் யூத வேத சட்டதிட்டங்களை ஐயந்திரிபறக் கற்றுணர்ந்த பெரிய பரிசேயன். முதல் வேதசாட்சியான அர்ச். முடியப்பரை கல்லால் எறிந்து கொன்றவர்களுடைய வஸ்திரங்களைத் தமது பதத்தருகில் வைத்து அந்தக் கொலை பாதகத்திற்கு உடன்பட்டவராயிருந்தவரும் இவரே.

     இத்தகைய மத வைராக்கியங் கொண்ட பரிசேயனான சவுல் என்பவர் மனந்திரும்பி, பெரிய அப்போஸ்தலரானது எங்ஙனம்? இது தேவ வரப்பிரசாதத்தின் வேலையேயன்றி வேறல்ல. “அவருடைய வரப்பிரசாதம் என்னிடத்தில் வீணாய்ப் போகவில்லை. எல்லோரையும்விட அதிகமாய் நான் வேலை செய்தேன். ஆயினும் நானல்ல; என்னோடு சர்வேசுரனுடைய வரப்பிரசாதமே அப்படிச் செய்தது.” (1கொரி.15:10)

சவுல் அற்புதமாய் மனந்திரும்பின வரலாறு

     அர்ச். சின்னப்பருடைய சீடனாகிய அர்ச். லூக்காஸ் என்பவர் அப்.நடபடி ஆகமம் ஒன்பதாம் அதிகாரத்தில் இவ்வரலாற்றை விரிவாக எழுதியுள்ளார். இந்த அதிசய சம்பவத்தை கவனமாய்க் கேட்டு ஒரு சிறிதேனும் தியானிக்கிறவர்கள் யாராயினும் பெருத்த நன்மை அடைவார்களென்பது உறுதி. “சவுல் என்பவர் இன்னும் ஆண்டவருடைய சீடர்களை பயமுறுத்திக் கொலை செய்யும்படி சீறிக்கொண்டு, பெரிய குருவினிடத்தில் போய் இந்த மார்க்கத்தாரான எந்த ஆண்களையும் பெண்களையும்  தான் கண்டால், அவர்களை கட்டி ஜெருசலேமுக்கு கொண்டுவரும்படி தாமாஸ்குவிலுள்ள ஜெப ஆலயங்களுக்கு நிருபங்களைக் கேட்டார். அப்படியே அவர் பயணமாய்ப் போய், தமாஸ்குக்குச் சமீபித்தப்போது நடந்ததேதெனில்: திடீரென வனத்திலிருந்து ஓர் ஒளி சூழ்ந்து பிரகாசிக்கவே அவர் திரையிலே விழுந்து: “சவுலே, சவுலே, ஏன் என்னை துன்பப்படுத்துகிறாய்? ” என்று தன்னை நோக்கிச் சொல்கிற சப்தத்தைக் கேட்டார்.

     அப்பொழுது அவர் : “ ஆண்டவரே, நீர் யார்? ” என்று கேட்க,

     அவர் : “ நீ உபத்திரவப்படுத்துகிற சேசுநாதர் நாமே; தாற்றுக்கோலை எதிர்த்து உதைக்கிறது உனக்குக் கடினமாம்” என்றார்.

     இதைக் கேட்டு அவர் நடுநடுங்கி பிரமித்து : “ஆண்டவரே, நான் என்ன செய்யும்படி சித்தமாயிருக்கிறீர்? ”என்றார்.

     ஆண்டவர் அவருக்கு மாறுத்தாரமாக : “நீ எழுந்து பட்டணத்துக்குள்ளே போ; நீ செய்ய வேண்டியது இன்னதென்று அங்கே உனக்குச் சொல்லப்படும்” என்றார்.

     அப்பொழுது அவரோடு கூட பிரயாணஞ் செய்த மனிதர்கள் சப்தத்தைக் கேட்டாலும், ஒருவரையும் காணாமல் பிரமித்து நின்றார்கள். அப்பொழுது சவுல் தரையினின்று எழுந்து தன் கண்களை திறந்தும் ஒன்றும் காணாதிருந்தார். ஆகையால் அவர் கையைப் பிடித்துத் தாமாஸ்குப் பட்டணத்திற்கு கூட்டிக் கொண்டு போனார்கள்.. அங்கே அவர் மூன்று நாளளவாக கண் தெரியாதவராய், சாப்பிடாமலும், குடியாமலும் இருந்தார். அப்பொழுது தமாஸ்கு பட்டணத்தில் அனனியா என்னும் பெயருள்ள ஓர் சீடனிருந்தார். ஆண்டவர் தரிசனத்தில் அவரை நோக்கி: “அனனியாவே” என்க, அவர்: “ஆண்டவரே இதோ அடியேன்” என்றார்.

     அப்பொழுது ஆண்டவர் அவரை நோக்கி : “நீ எழுந்திருந்து நேர் வீதியென்னும் தெருவுக்குப் போய், தார்சு நகரத்தானாகிய சவுல் என்பவனை யூதாவின் வீட்டிலே விசாரி. ஏனெனில், இதோ அவன் ஜெபம் செய்கிறான்” என்றார். (அப்பொழுது சவுல்) அனனியா என்னும் ஒரு மனிதன் உள்ளே பிரவேசிக்கிறதையும், தான் பார்வையடையும்பொருட்டு தன் மேல் கரங்களை நீட்டி வைக்கிறதையும் தரிசித்தார்.

     அனனியா பதில் மொழியாக: “ஆண்டவரே, இந்த மனிதன் ஜெருசலேமில் உம்முடைய அர்ச்சிஷ்டவர்களுக்கு எத்தனையோ பொல்லாங்குகளைச் செய்தானென்று அநேகரால் கேள்விப்பட்டிருக்கிறேன். இங்கேயும் உமது நாமத்தைத் தொழுகிற சகலரையும் பிடித்துக் கட்டும்படி பிரதான ஆசாரியர்களிடத்தில் இவன் அதிகாரம் பெற்றிருக்கிறானே!” என்றார்.

     அதற்கு ஆண்டவர்: “ நீ போ; ஏனெனில், இவன் புறஜாதிகளுக்கும் இராஜாக்களுக்கும் இஸ்ராயேல் புத்திரருக்கும் முன்பாக நம்முடைய நாமத்தைக் கொண்டு போவதற்கு நாம் தெரிந்துகொண்ட பாத்திரமாயிருக்கிறான். நமது நாமத்தினிமித்தம் அவன் எம்மாத்திரம் பாடுபட வேண்டுமென்று நாம் அவனுக்குக் காண்பிப்போம்” என்றார்.

     ஆகையால் அனனியா என்பவர் போய் அந்த வீட்டில் பிரவேசித்து அவர்மேல் கைகளை வைத்து: “சவுல் சகோதரரே, நீர் வந்த வழியில் உமக்கு தரிசனையான ஆண்டவராகிய சேசுநாதர், நீர் பார்வையடையவும், இஸ்பிரீத்துசாந்துவினால் நிரப்பப்படவும் என்னை அனுப்பினார்” என்றார்.

     உடனே அவருடைய கண்களிலிருந்து செதிள்கள் போன்றவை விழவே அவர் பார்வையடைந்து எழுந்து ஞானஸ்நானம் பெற்றார். பின்னும் அவர் போஜனம் பண்ணிப் பலமடைந்தார். மேலும், அவர் தமாஸ்கு பட்டணத்திலிருந்த சீடர்களோடு சில நாள் தங்கியிருந்து, தாமதமில்லாமல் சேசுநாதரே, சர்வேசுரனுடைய சுதன் என்று ஜெப ஆலயங்களில் பிரசங்கித்து வந்தார்.

     அவர் பிரசங்கிக்கிறதைக் கண்ட யாவரும் பிரமித்து: “இந்த நாமத்தைத் தொழுகிறவர்களை ஜெருசலேமில் உபத்திரவப்படுத்தினவன் இவனல்லோ? இங்கேயும் அப்படிப்பட்டவர்களைக் கட்டி, பிரதான ஆசாரியர்களிடத்தில் இழுத்துக் கொண்டு போகும்படி வந்தவனல்லோ?” என்றார்கள். சவுலோ மென்மேலும் திடன்கொண்டு, கிறீஸ்துவானவர் இவரேயென்று உறுதிப்படுத்தி தமாஸ்குப் பட்டணத்தில் வசித்திருந்த யூதரைக் கலங்கடித்தார். (அப்.நட.9:1-22)

அன்பார்ந்த சகோதரர்களே! பிள்ளைகளே!

     இந்த அற்புத வரலாற்றை வாசித்த பிற்பாடு எப்பேர்ப்பட்ட பெரும் பாவியானாலும் அதைரியப்படலாமா? அவநம்பிக்கைப்படலாமா? கொடிய வேத விரோதியாகிய சவுலை மனந்திருப்பித் தமக்கு உகந்த அப்போஸ்தலராக மாற்றிய தயாளம் நிறைந்த சேசுவின் திருக்கரம் இப்போது குறுகிவிட்டதா? “ சவுலே, சவுலே, ஏன் என்னைத் துன்பப்படுத்துகிறாய்? ” என்று சொன்ன குரலானது இன்றைக்கும் உன்னைப் பார்த்து: “ ஏன் என்னை உபாதிக்கிறாய்? ” என்று சொல்லுகிறதை நீ கேட்கிறதில்லையா? நீயும் சவுலைப் போல், “ஆண்டவரே! நீர் யார்? ” என்று கேள். “நீ உபத்திரவப்படுத்துகிற சேசு நாமே”என்பார். ஏனென்றால், சத்திய திருச்சபையானது சேசுவின் நேச பத்தினி. திருச்சபையை விரோதிக்கிறவன் திவ்விய சேசுவை உபாதிக்கிறான். மேற்றிராணிமார்கள், குருக்கள், சேசுவின் பிரதிநிதிகள். அவர்களை நிந்திக்கிறவன் இரட்சகரை நிந்திக்கிறான்.

     அஞ்சா நெஞ்சு படைத்த சவுல் நடுநடுங்கி, “ஆண்டவரே, நான் என்ன செய்யும்படி சித்தமாயிருக்கிறீர்?” என்று கேட்டாரல்லோ? அவருக்குக் கிடைத்த மறுமொழியென்ன? “நீ எழுந்து பட்டணத்திற்கு போ; நீ செய்யவேண்டியது இன்னதென்று உனக்குச் சொல்லப்படும்.” அப்படியே, கீழ்ப்படிந்து சவுல் சென்றார். அனனியாவைக் கண்டார். வேண்டிக்கொண்டார். ஞானஸ்நானம் பெற்றார். கண்கள் திறக்கப்பட்டன. போஜனம் அருந்தினார். பலம் அடைந்தார்.

பாவி சவுல் பரிசுத்த பவுலாக மாறினார்

     இனிமேல், “கிறீஸ்துநாதர் எனக்கு ஜீவன், மரணம் எனக்கு ஆதாயம். ஜீவிக்கிறேன். ஆனால் நானல்ல; கிறீஸ்து என்னில் ஜீவிக்கிறார். நான் கிறீஸ்துநாதரைக் கண்டுபாவிக்க வேண்டுமென்று உங்களை மன்றாடுகிறேன்” என்பார்.

     சவுல் எழுந்திருந்து, ஜெபதவம் பண்ணி, அனனியா என்பவரிடம் போய், ஞானஸ்நானம் பெற்று, கண் பார்வையடைந்து, போஜனம் அருந்தி, பழைய மனிதனைக் களைந்து, புதிய மனிதனைத் தரித்து, தேவ சிநேக அக்கினியினால் மூட்டப்பட்டு, நாலாப்பக்கமும் சென்று, சிலுவையில் அறையுண்ட திவ்விய சேசுவைப் பிரசங்கித்து, பெரிய அப்போஸ்தலராய்த் திகழ்ந்து, பல்லாயிரம் ஆத்துமாக்களை இரட்சித்ததுபோல நீங்களும் இந்த தபசுக்காலத்தில் தேவ கிருபையினால் ஞானப்பிரகாசம் அடைந்து, பாவ சமயங்களை விட்டு விலகி, ஜெபதவஞ் செய்து, குருவானவரிடம் சென்று நல்ல பாவசங்கீர்த்தனம் செய்து, திவ்விய நன்மை உட்கொண்டு கத்தோலிக்க ஊழியத்தில் ஈடுபட்டு, ஞான அதிகாரிகளோடு ஒத்துழைத்து, சத்தியமறை செழித்தோங்கும்படி பிரயாசைப்பட வேண்டும். இதுமாத்திரமல்ல:

     அர்ச். சின்னப்பர் மனந்திரும்பின பிற்பாடு: “ இவன் புறஜாதி ஜனங்களுக்கும் இஸ்ராயேல் புத்திரருக்கு முன்பாகவும் நம்முடைய நாமத்தைக் கொண்டுபோவதற்கு நாம் தெரிந்துகொண்ட பாத்திரம். நமது நாமத்தினிமித்தம் அவன் எம்மாத்திரம் பாடுபட வேண்டுமென்று நாம் அவனுக்குக் காண்பிப்போம்” என்று முன்னறிவித்தார் நமது திவ்விய மீட்பர்.

     அதுபோலவே, யூதர்களுக்கும், புறஜாதி ஜனங்களுக்கும் வேதத்தைப் போதிக்கும்படி மும்முறை நீண்ட பிரயாணங்கள் செய்தார். இவரைப் போல எந்த அப்போஸ்தலரும் உழைக்கவில்லை. இவரைப் போல் எவரும் துன்பப்படவில்லையென்று சொன்னால் மிகையாகாது. எல்லோரையும் கரையேற்றும்படிக்கு எல்லோருக்கும் எல்லாமானவர், ஆத்துமங்களை இரட்சிக்கும் பொருட்டு தம்மை முற்றிலும் அர்ப்பணித்தவர்.

     அவர் பட்ட பாடுகளையும் அவருக்குண்டான ஆபத்துக்களையும் சிறிது அறிய வேண்டுமேயானால், அவர் கொரிந்தியருக்கு எழுதிய நிருபத்தில் சொல்லுகிறதைக் கேளுங்கள்:

“வேலைகளில் மிச்சமாயும், சிறைகளில் மிகுதியாயும், அடிகளில் மட்டுக்கு மிஞ்சியும், மரண ஆபத்துக்களில் அடிக்கடியும் உட்பட்டவன். யூதர்களால் ஒன்று குறைய நாற்பது அடியாக ஐந்து தரம் அடிப்பட்டேன். மூன்று தரம் பிரம்புகளால் அடிப்பட்டேன். ஒரு தரம் கல்லாம் எறியப்பட்டேன். ஒரு இரவும் பகலும் ஆழ்ந்த கடலில் போக்கினேன். அடிக்கடி பயணஞ் செய்ததினாலே, ஆறுகளின் ஆபத்துக்களிலும், கள்வரின் ஆபத்துக்களிலும், என் ஜாதி ஜனத்தால் வந்த ஆபத்துக்களிலும், அந்நிய ஜனத்தால் வந்த ஆபத்துக்களிலும், கள்ளச் சகோதரர்களால் வந்த ஆபத்துக்களிலும், பிரயாசைகளிலும், துன்பங்களிலும், அநேக முறை கண் விழிப்பிலும், பசிதாகத்திலும், அநேகமுறை உபவாசங்களிலும், குளிரிலும் நிர்வாணத்திலுமிருந்தேன்.

     “புறத்திப்பட்ட இவைகளையுமல்லாமல், எல்லா சபைகளையும் பற்றிய கவலையானது என்னை அநுதினமும் பீடிக்கின்றது. ஒருவன் பலவீனனானால் நானும் பலவீனமாகிறதில்லையோ? ஒருவன் இடறினால் என் மனம் எரிகிறதில்லையோ? நான் மேன்மைபாராட்ட வேண்டியதானால் என் பலவீனத்திற்கடுத்தவைகளைப் பற்றி மேன்மை பாராட்டுவேன். நான் பொய் சொல்லுகிற தில்லையென்று என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கப்பட்டவராகிய கடவுளும், நம்முடைய ஆண்டவராகி சேசு கிறீஸ்துநாதருடைய பிதாவுமாயிருக்கிறவர் அறிவார். தமாஸ்கு  நகரத்தில் அரெத்தா இராஜனின் சேனைத் தலைவன் தமாஸ்கு பட்டணமெங்கும் காவல்களை வைத்து என்னைப் பிடிக்கப்பார்த்தான். அப்பொழுது நான் ஒரு கூடையிலே வைக்கப்பட்டு, ஜன்னலிலிருந்து மதில் வழியாய் இறக்கி விடப்பட்டு, இவ்விதமாய் அவன் கைக்குத் தப்பினேன்.” (2கொரி.11-ம் அதி.)

     அன்பார்ந்த பிள்ளைகளே, சேசுநாதரைப் பின்சென்று பக்தியாய் நடக்க யாருக்கு மனசுண்டோ அவர்கள் யாவரும் உபத்திரவப்படுவார்கள். சேசுநாதரோடுகூட பாடுபட்டால் அவரோடேகூட அரசாளுவோம். இது சத்திய வாக்கு. அப்படியானால் உங்களுக்கு வியாதி வருத்தமோ, துன்ப துரிதமோ, இக்கட்டு இடைஞ்சலோ, நிந்தை அவமானமோ, பணக்கஷ்டமோ, மானநஷ்டமோ, என்ன நேரிட்டபோதிலும் பரலோகத்தை அண்ணார்ந்து பார்த்து: “பிதாவே, எனது மனதின்படியல்ல, உமது சித்தத்தின்படி ஆகட்டும்” என்று சொல்லுங்கள். இதுவே, அர்ச்சிஷ்டதனத்தின் அடையாளம். சிலுவையின்றிக் கிரீடமில்லை. சேசுவின் நேசம் சிலுவையின் பாசம்.

     அர்ச். சின்னப்பருடைய தங்கமான இருதயத்தைக் கொள்ளை கொண்டவர் சிலுவையில் அறையுண்ட நாதனே. அவர் எழுதிய 14 நிருபங்களும் இதற்கு அத்தாட்சி. இருதய நிறைவால் வாய் பேசும். இந்த நிருபங்களில் சேசுவின் திருநாமத்தை 240 தடவைக்குமேல் பிரயோகித்திருக்கிறார். அவருடைய ஞானமெல்லாம் திவ்விய சேசு. அவர் போதித்ததெல்லாம் சிலுவையில் அறையப்பட்ட சேசு. அவருடைய சந்தோஷமெல்லாம் இனிமையான சேசு. அவருடைய மகிமையெல்லாம் மனோகர சேசு. சேசுவுக்காக ஜீவித்து, சேசுவுக்காக மரித்தார் அர்ச்.சின்னப்பர். இதனாலல்லொ, பொன்வாய் அர்ச்.கிறீசோஸ்தோம் என்பவர் “சின்னப்பரின் இருதயம் சேசுவின் இருதயம்” என்கிற பொன் மொழியால் அர்ச்.சின்னப்பரைக் குறித்து சொல்லக் கூடிய புகழ்மாலையெல்லாம் சுருங்கச்சொல்லி நன்கு விளங்கப்பண்ணியிருக்கிறார்.

     அர்ச்.சின்னப்பருடைய இருதயம் சேசுவின் திருஇருதயமயமாய் இருந்ததினாலல்லோ, சேசுவின் சகோதரர்களுக்காக தம்மை முழுவதும் தத்தம் பண்ணினார். திவ்விய சேசுவுக்காக­­ தன்னை முழுவதும் செலவழித்து, வேதசாட்சி முடிபெற்ற சுத்த வீரன் சொன்ன வீர மொழிகளை நாமும் நமது மரணப்படுக்கையில் சொல்லக்கூடுமானால் நாம் பாக்கியவான்கள். “ நானோ, இதோ பலியாகப்போகிறேன். என் தேகக் கட்டு அவிழுங் காலம் கிட்டியிருக்கின்றது. நல்ல யுத்தம் செய்தேன். என் பயணத்தை முடித்தேன். விசுவாசத்தைக் காத்தேன். கடைசியாய், நீதியின் கிரீடம் எனக்காக வைக்கப்பட்டிருக்கிறது. இது நீதியுள்ள நடுவராகிய கர்த்தர் அந்த மகா நாளில் எனக்குக் கொடுப்பார். எனக்கு மாத்திரமல்ல, அவருடைய வருகையை ஆசிக்கிற சகலருக்கும் அவர் அதை அளிப்பார்.” (2தீமோ.4-ம் அதி.)

     அன்பார்ந்த சகோதர்களே! பிள்ளைகளே! நாம் எல்லோரும் ஒருநாள் சாக வேண்டியவர்கள். கடைசி முச்சுவிடும் அந்த நாள் எப்போது வருமோ தெரியாது. நமது அந்தி நேரம் கிட்டியபோது, பாடுபட்ட சுரூபத்தை நமது கையிலெடுத்து பக்தியோடு முத்திசெய்து: “ என் நேச சேசுவே! உமக்காக என் ஜீவிய காலமெல்லாம் நல்ல யுத்தம் செய்தேன். விசுவாசத்தை நான் இழக்கவில்லை. இழக்காதது மாத்திரமல்ல, அந்தகாரத்தில் அமிழ்ந்திருந்த அநேகரை உமது தெய்வீக விசுவாசப் பிரகாசத்திற்கு கொண்டுவந்தேன். என் ஜீவிய காலமெல்லாம் உமது திரு இருதயமே, எனது ஏக நம்பிக்கை. உமக்காக நான் அனுபவித்த துன்பங்கள் ஏராளம். எல்லாம் முற்றிலும் முடிந்தது. சேசுவின் திரு இருதயமே, உம்மை நம்பினேன். உம்மை சிநேகிக்கிறேன்” என்றுகூறி  கடைசி மூச்சுவிடுவோமாக.

     இப்படிச் செய்வோமேயாகில் நீதியுள்ள நடுவராகி நமது நேச அப்போஸ்தலராகிய அர்ச். சின்னப்பருக்கு அளித்த நீதியின் கிரீடத்தை நமக்கு அளிப்பார். அப்படியே ஆகக்கடவது! திருஇருதய இராஜாவும், அவருடைய நேசத்தாய் அமலோற்பவியும், நல்ல தந்தை அர்ச். சூசையப்பரும் நம் எல்லோரையும் சம்பு+ரணமாய் ஆசீர்வதிப்பார்களாக!

–    வந். பிரான்சிஸ் திபூர்சியூஸ் ரோச். (தூத்துக்குடி முதல் ஆண்டகை)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *